Friday 13 November 2009

ஐயகோ உறவுகளே…..



வன்னிப் பெரு மண்ணில்
வன்முறைக்குள் அகப்பட்டு
உயிரைக் கையேந்தி
உருக்குலைந்த போது
ஊடகங்களுடாக எம்
வெளிநாட்டு உறவுகள்
ஓலமிட்டு அழுதார்கள்..
விம்மி வெதும்பினார்கள்…
வழியொன்று கிடைத்த போது
விதி நம்மை விட்டதென்று
உயிர் மட்டும் போதுமென்று
ஓடோடி முகாம்களுக்குள்
வந்து அடைந்த போது
முட்கம்பிகளுக்கிடையே நாம்
மூச்சைப்பிடித்து
முனங்கிக் கிடந்த போது….
அப்போதும் புலம்பினாhர்கள்…
அய்யகோ… எம் உறவுகளே
உயிரோடு வந்தீரே….இனி
காண்போமோ என்று
கலங்கிப் போனோமே….
இனி நீங்கள் கலங்க வேண்டாம்
இங்கே நாங்கள் இருக்கிறோம்…
விடுதலையாகி வாருங்கள்….
வெளியில் நாங்கள் இருக்கிறோம்…
விம்மலும் புலம்பலும் நீண்டன…
விடுதலை நாள் வந்தது…
வெறுங்கையராய் வெளியில் வந்தோம்…
மூலதனம் ஏதுமின்றி….
முதலில் இருந்து புது வாழ்வா..
மலைத்துப் போய் நின்ற நாம்
தொலைபேசியை நாடினோம்….
அந்நியநாட்டு உறவுகள்
இப்போதும் புலம்பினார்கள்…
“அய்யகோ என் உறவுகளே…-எனக்கு
அங்கு கடன்… இங்கு கடன்…
அஞ்சு காசு கூட என்னால்
இங்கு புரட்ட முடிவதில்லை…
கையில நகையிருந்தா.. அடகு வையுங்கோ…
தையில பார்ப்பம்…. முயற்சி செய்யுறன்..”
மரண பயம் வந்தபோது
உயிர் தப்ப எண்ணினோமே…
உயிர் தப்பி வந்த பின்னர்…
உய்ய வழி ஏதுமின்றி… இதைவிட
உயிர்விட்டே இருக்கலாமே…
இப்போது தான் புலம்புகிறோம்…
வானத்தை அண்ணார்ந்து பார்க்கிறோம்….
இருள் விலகுகிறது..
நட்சத்திரங்களின் கண்சிமிட்டல்கள்
மறைந்து போயின…
சூரியனின் நம்பிக்கை ஒளி மட்டும்
மெல்லிய படலமாக….
இனியும் விழமாட்டோம்…..

(இது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டதல்ல. அந்நிய நாட்டில் துன்புறும் உறவுகள் மன்னிக்க வேண்டும். எல்லோரும் இப்படி நடப்பவர்கள் அல்ல. இது எனக்குள் விம்மி வெடித்த வேதனைச் சிதறல்கள். இது என் சொந்த உணர்வு மட்டுமே.)

4 comments:

  1. சூரியனின் நம்பிக்கை ஒளி மட்டும்

    மெல்லிய படலமாக….

    நம்பிக்கை தரும் கவிதை முடிவு வரிகள் மானுட ஆதார உணர்வும் அதுவே

    ReplyDelete
  2. உண்மை உண்மை வாயால் விளையாடும் மனிதர்களும் இந்த உலகில் உள்ளனர் . நாங்கள் தான் பார்த்து உறவை வைக்கவேண்ட்டும்

    ReplyDelete
  3. மற்றொரு ஹேமா?
    கவிதை பிடிச்சிருக்கு பூங்கோதை.

    ReplyDelete
  4. //சூரியனின் நம்பிக்கை ஒளி மட்டும்
    மெல்லிய படலமாக….
    இனியும் விழமாட்டோம்…..//

    விடியாத இரவொன்று வானில் இல்லை.....
    விடியல் தூரமில்லை....

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!